2 பாட்டில் மது குடித்தும் 'கிக்' ஏறவில்லை; உள்துறை மந்திரியிடம் போதை ஆசாமி புகார்
மத்திய பிரதேசத்தில் 2 பாட்டில் மது குடித்தும் 'கிக்' ஏறவில்லை என கூறி உள்துறை மந்திரியிடம் போதை ஆசாமி புகார் அளித்து உள்ளார்.
உஜ்ஜைன்,
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் பகதூர்கஞ்ச் பகுதியில் வசிப்பவர் லோகேந்திர சாதியா என்ற லோகேஷ். கடந்த ஏப்ரல் 12ந்தேதி கடைக்கு சென்று 4 மதுபாட்டில்களை வாங்கியுள்ளார்.
குடிக்கு அடிமையான லோகேஷ், அவற்றில் 2 பாட்டில் மதுபானங்களை குடித்ததில் அவருக்கு போதை ஏறவில்லை. மதுவில் 'கிக்' ஏறாத நிலையில், அதுபற்றி மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா, கலால் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இது கலப்பட சாராயம் என சந்தேகிக்கிறேன். 2 மது பாட்டில்கள் குடித்தும் கிக் ஏறவில்லை என தெரிவித்து உள்ளார். அதற்கு சான்றாக, அவர் வாங்கி வைத்திருந்ததில் மீதமிருந்த மதுபாட்டில்களையும் கலால் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த மதுபாட்டில்களில் தண்ணீரே உள்ளது. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தொடர்புடைய ஒப்பந்ததாரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
இந்த புகார் தெரிவிப்பதற்கு முன்பு, அதுபற்றி கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. உன்னால் என்ன முடியுமோ அதனை செய்து கொள் என அவர்கள் லோகேஷிடம் கூறியுள்ளனர்.
இதனால், அடுத்த கட்ட நடவடிக்கையாக லோகேஷ் நேராக மந்திரிக்கே புகார் தெரிவித்து விட்டார். இந்த புகார் பற்றி கலால் துறை அதிகாரி ராம்ஹன்ஸ் பசோரி கூறும்போது, இந்த விவகாரத்தில் நாங்கள் இன்னும் புகாரை பெறவில்லை. புகார் பெற்ற பின்னர் குற்றம் கண்டறியப்பட்ட நபர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story