விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு குறைகிறது


விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு குறைகிறது
x
தினத்தந்தி 9 May 2022 5:54 AM IST (Updated: 9 May 2022 5:54 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

புதுடெல்லி, 

காஷ்மீரில் எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 708-ல் இருந்து 700 ஆக குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்பு புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மற்றும் மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) அடங்கிய தேர்தல் குழு (எலக்ட்ரோல் காலேஜ்), ஜனாதிபதியை தேர்வு செய்கிறது.

இந்த தேர்தலில் ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பானது நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் ஒரு எம்.பி.யின் ஒட்டு மதிப்பு 708 ஆக இருக்கிறது. முன்னதாக 1952 தேர்தலில் 494 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பின்னர் 1957 தேர்தலில் 496 ஆக அதிகரித்தது. அதேநேரம் 1962-ல் 493 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 1967 மற்றும் 69 தேர்தல்களில் 576 ஆக அதிகரித்தது.

பின்னர் 1974-ம் ஆண்டு 723 ஆக இருந்த ஓட்டு மதிப்பு, 1977 முதல் 92 வரை 702 ஆக குறைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், காஷ்மீரில் சட்டசபை கலைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. அத்துடன், ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீர் தற்போது 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது.

இதில் சட்டசபை கொண்ட யூனியன் பிரதேசமான காஷ்மீரில் தொகுதி மறுவரையறை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்து சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்பதால், இந்த ஜனாதிபதி தேர்தலில் காஷ்மீர் எம்.எல்.ஏ.க்களின் பங்களிப்பு இருக்காது.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பும் சரிகிறது.

அந்த வகையில் எம்.பி. ஒருவரின் ஓட்டு மதிப்பு 708-ல் இருந்து 700 ஆக குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாநில எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடியாதது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 1974-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குஜராத் மாநில எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலை எதிர்த்து மாநிலத்தில் மாணவர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தால் அந்த ஆண்டு மார்ச் மாதம் குஜராத் அரசு கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் அந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குஜராத் எம்.எல்.ஏ.க்களால் வாக்களிக்க முடியவில்லை.

இதைப்போலவே இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் காஷ்மீர் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. அதேநேரம் அந்த மாநில எம்.பி.க்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story