அடுத்த 48 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழந்த புயலாக மாறும் - வானிலை ஆய்வு மையம்
புயல் ஒடிசா அல்லது ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை. ஆனால் கரையோரத்திற்கு இணையாக கடலில் நகரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புவனேஷ்வர்,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று “அசானி புயல்” உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கில் 550 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒடிசா மற்றும் ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் மே10-ம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இந்த புயல் ஒடிசா, ஆந்திராவில் கரையைக் கடக்காது என்றும் மாறாக அடுத்த 2 நாட்களில் மெல்ல கடற்கரையை ஒட்டியே நகர்ந்து சென்று வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அசானி புயல் கிழக்கு கடற்கரைக்கு இணையாக நகர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை முதல் மழையை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
SCS Asani moved WNW with a speed of 25 kmph during past 06 hours and lay over WC and adjoining South BoB at 0530 hours IST. To move NWwards till 10th May and reach WC & adjoining NW BoB off North AP & Odisha coasts. To weaken gradually into a Cyclonic Storm in next 48 hrs. pic.twitter.com/fTlSP9LR4T
— India Meteorological Department (@Indiametdept) May 9, 2022
கடலோர ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி மணிக்கு 25 கி.மீ வேகத்தில் இந்த புயல் நகர்ந்து வருகிறது. மே 10 ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, இது வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, ஒடிசா கடற்கரையை ஒட்டி வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது. இது படிப்படியாக வலுவிழந்து அடுத்த 48 மணி நேரத்தில் வேகம் குறைந்த புயலாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடலில் மிக உயர்ந்த கடல் அலைகள் நிலவும் எனவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அசானி புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க ஆகிய 3 மாநிலங்களில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யக்கூடும். ஆந்திராவில் செவ்வாய், புதன்கிழமைகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அசானி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Related Tags :
Next Story