ரானா தம்பதிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்- மும்பை போலீசார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 9 May 2022 4:14 PM GMT (Updated: 9 May 2022 4:14 PM GMT)

ரானா தம்பதிகளின் ஜாமீனை, கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும் என மும்பை போலீசார் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மும்பை, 

  முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் இல்லமான மதோஸ்ரீ முன்பு அனுமன் பஜனை நடத்தப்போவதாக அறிவித்து மும்பை வந்த அமராவதி சுயேட்சை எம்.பி. நவ்நீத் ரானா மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ரானாவை போலீசார் கடந்த 23-ந் தேதி அதிரடியாக கைது செய்தனர்.  அவர்கள் மீது தேசதுரோகம், இரு பிரிவினரிடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில ரானா தம்பதிகள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சிறப்பு கோர்ட்டை நாடினர்.  இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, அவர்களுக்கு கடந்த மே 4-ந் தேதி தம்பதிக்கு பல்வேறு நிபத்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. 

அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஊடகங்களில் பேசக்கூடாது, இதுபோன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நவ்நீத் ரானா, உத்தவ் தாக்கரேவை தன்னுடன் தேர்தலில் போட்டியிடுமாறு சவால் விடுத்தார். இந்நிலையில் கார் போலீஸ் நிலையம் சார்பில், சிறப்பு கோர்ட்டில் எம்.பி. நவ்நீத் ரானாவின், கணவர் ரவி ரானாவின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கூறி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:-

குற்றம் வாட்டப்பட்ட எம்.பி. நவ்நீத் ரானா மற்றும் எம்.எல்.ஏ. ரவி ரானா இருவரும் விடுதலையானவுடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியபோது சிறப்பு கோர்ட்டு விதித்த நிபந்தனையை அவர்கள் மீறியுள்ளனர். இதன்காரணமாக அவர்களின் ஜாமீனை கேர்ட்டு ரத்து செய்வதுடன், அவர்களுக்கு வாரண்ட் பிறப்பிக்க வேண்டும். அவர்களை உடனடியாக காவலில் எடுக்க ஆணை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story