சென்னையில் வீடுகளை இடிப்பது தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


சென்னையில் வீடுகளை இடிப்பது தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 9 May 2022 8:27 PM GMT (Updated: 9 May 2022 8:27 PM GMT)

இந்தப்பகுதியில் உள்ள மக்களை 40 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் குடியமர்த்த போவதாக தெரிவிக்கின்றனர்.

புதுடெல்லி, 

சென்னை கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து பெண்ணுரிமை இயக்கத்தலைவர் லீலாவதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், ‘புனர்வாழ்வு ஏற்பாடுகளை செய்யாமலேயே இதுவரை 40 வீடுகளை இடித்துள்ளனர். இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவதாகும். மேலும் இந்தப்பகுதியில் உள்ள மக்களை 40 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் குடியமர்த்த போவதாக தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களின் தினக்கூலி வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அருகாமையில் மாற்று குடியிருப்பை ஏற்பாடு செய்யும் வரையில் வீடுகளை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு தொடர்பாக மூத்த வக்கீல் கொலின் கன்சால்வேஸ் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று ஆஜராகி, ‘சென்னையில் குடிசைப்பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும்’ என்றார்.

அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பான மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். மேலும் குடிசைகளை இடிக்கும் பணியை நிறுத்தி வைக்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலையிடுவதா? என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Next Story