பதற்றத்தில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுவன் விமானம் ஏற தடை விதிப்பு தனியார் விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்தது


பதற்றத்தில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுவன் விமானம் ஏற தடை விதிப்பு தனியார் விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்தது
x
தினத்தந்தி 10 May 2022 3:16 AM IST (Updated: 10 May 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

அச்சிறுவன் பதற்றமான நிலையில் இருந்ததால், அவனை பெற்றோர் அமைதிப்படுத்தியபடி இருந்தனர்.

ராஞ்சி, 

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து ஐதராபாத்துக்கு ‘இண்டிகோ’ தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது. வளர் இளம் பருவத்தை சேர்ந்த தங்கள் மாற்றுத்திறனாளி மகனுடன் ஒரு கணவன்-மனைவி, அதில் பயணம் செய்ய வந்தனர்.

அச்சிறுவன் பதற்றமான நிலையில் இருந்ததால், அவனை பெற்றோர் அமைதிப்படுத்தியபடி இருந்தனர். விமானத்தில் ஏறப்போகும் போதும் அவன் பதற்றத்துடன் காணப்பட்டதால், அவன் விமானம் ஏறுவதற்கு தடை விதிக்கப்படுவதாக விமான நிறுவன மேலாளர் அறிவித்தார். சக பயணிகள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. தங்கள் மகன் அனுமதிக்கப்படாத நிலையில், தாங்களும் பயணம் செய்ய விரும்பவில்லை என்று பெற்றோரும் அதில் செல்லவில்லை.

இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியை சில பயணிகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இதனால் நாடு முழுவதும் பரவி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

இதையடுத்து, ‘இண்டிகோ’ நிறுவன தலைமை செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா, இதற்கு வருத்தம் தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். மேலும், அந்த பெற்றோரின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில், சிறுவனுக்கு எலெக்ட்ரிக் சக்கர நாற்காலி வாங்கித்தர உள்ளதாக அறிவித்தார்.

மேலும், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா, இந்த சம்பவம் குறித்து, தானே நேரடியாக விசாரிக்கப்போவதாக கூறியுள்ளார்.

சிவில் விமான போக்குவரத்து இயக்குனரம், சம்பவம் குறித்து விமான நிறுவனத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

Next Story