ஆந்திரா: கடலில் மிதந்து வந்த தங்க நிறத்திலான தேர்..!


ஆந்திரா: கடலில் மிதந்து வந்த தங்க நிறத்திலான தேர்..!
x
தினத்தந்தி 11 May 2022 5:11 AM GMT (Updated: 11 May 2022 5:13 AM GMT)

ஆந்திராவில் கடலில் மிதந்து வந்த தங்க நிறத்திலான தேரை மீனவர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

ஆந்திரா: 

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சுன்னப்பள்ளி பகுதியில் மீனவர்கள் நேற்று மாலை ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தங்க நிறத்திலான தேர் கடலில் மிதந்து கொண்டு இருந்தது.

தூரத்தில் பார்க்க கோவில் மிதந்து வருவதுபோல் இருந்ததை கண்டு மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் அருகே சென்று பார்த்தபோது தங்க முலாம் பூசப்பட்ட தேர் என  தெரிய வந்தது.  தேரினில் ஆட்கள் யாரும் இல்லை.

இதையடுத்து மீனவர்கள் அந்த தேரை தங்களது படகில் கட்டிக் கொண்டு சுன்ன பள்ளி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலோர காவல் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  படகிலிருந்து தேரை மீட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது தேரின் மீது வெளிநாட்டு மொழியில் எழுதப்பட்டு இருந்தது. அந்த எழுத்துக்கள் தாய்லாந்து, ஜப்பான் அல்லது மலேசிய நாட்டு எழுத்துக்களாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் 16.1.22 என எழுதப்பட்டு இருந்தது

அதிகாரிகள் தேரில் எழுதப்பட்டு இருந்த எழுத்துக்கள் எந்த நாட்டை சேர்ந்தது, எந்த நாட்டில் இருந்து தேர் கடலில் மிதந்து வந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஆந்திராவில் அசானி புயல் கரையை கடப்பதால் கடல் சீற்றம் காரணமாக தேர் ஆந்திரா கடலில் மிதந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

கடலில் தேர் மிதந்து வந்த சம்பவம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Next Story