ராஜஸ்தானில் 3 நாள் காங்கிரஸ் மாநாடு நாளை தொடங்குகிறது


ராஜஸ்தானில் 3 நாள் காங்கிரஸ் மாநாடு நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 May 2022 12:52 AM GMT (Updated: 12 May 2022 8:37 AM GMT)

ராஜஸ்தானில் 3 நாள் காங்கிரஸ் மாநாடு நாளை தொடங்குகிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இது 3 நாள் மாநாடு ஆகும். 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இத்தகைய மாநாடு நடக்கிறது.

இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு ‘சிந்தனை அமர்வு’ நடந்தபோது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால் தற்போது மத்தியில் ஆட்சியில் இல்லாததுடன், 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து 100-க்கும் குறைவான எம்.பி.க்களையே கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. நாடு முழுவதும் இருந்து 430 நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டுக்கு ராகுல்காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து ரெயில் மூலம் உதய்பூருக்கு புறப்படுகிறார்கள்.

மாநாட்டில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொடக்க உரை ஆற்றுகிறார். 15-ந் தேதி, ராகுல்காந்தி நிறைவுரை ஆற்றுகிறார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் வியூகம் வகுக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலவரம், கொரோனா, வேளாண் பிரச்சினைகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை பங்குகள் விற்பனை, காஷ்மீர் தொகுதி மறுவரையறை, மத்திய-மாநில உறவுகள், மத அடிப்படையில் வாக்காளர்கள் ஒன்று சேர்வது ஆகிய பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் பல்வேறு குழுக்களாக அமர்ந்து விவாதிக்கிறார்கள்.

மேற்கண்ட பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இறுதி செய்யப்படுகிறது. கட்சி சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு காணப்படுகிறது.

‘ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்’ என்ற வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. கட்சியில் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு 50 சதவீத சீட் வழங்க வேண்டும் என்று சமூக நீதி குழுவும், 50 வயதுக்கு உட்பட்டோருக்கு 50 சதவீத சீட் வழங்க வேண்டும் என்று இளைஞர் விவகார குழுவும் பரிந்துரை செய்துள்ளன. அவை பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

முந்தைய சிந்தனை அமர்வுகளில், எந்த மாற்றங்களுக்கும் காலவரையறை நிர்ணயித்தது இல்லை. ஆனால், இந்த அமர்வில், காலவரையறை நிர்ணயிக்க உள்ளோம். வெறும் பூச்சு வேலையாக இல்லாமல், அர்த்தமுள்ளதாக, செயல்படுத்தக்கூடியதாக மாற்றங்கள் இருக்கும்.

கண்ணை மூடிக்கொண்டு எந்த கூட்டணிக்கும் இல்லாமல், முதலில் கட்சியை பலப்படுத்துவோம். கட்சியை பலப்படுத்தினால்தான், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரசுக்கு மரியாதை கிடைக்கும். காங்கிரஸ் வலுவாக இருந்தால், அந்த கூட்டணியும் வலுவாக இருக்கும். காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியம் இல்லை.

திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் பேசப்படும். மாநாட்டு விவாதம் அடிப்படையில், இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story