எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!


எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!
x
தினத்தந்தி 12 May 2022 1:51 PM IST (Updated: 12 May 2022 1:51 PM IST)
t-max-icont-min-icon

இந்த வழக்குகளில் 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கும் எல்.ஐ.சி நிறுவனத்துக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்யும் வகையில் நிதிச் சட்டத்திலும், எல்.ஐ.சி சட்டத்திலும் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி இ.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எல்.ஐ.சி பங்கு விற்பனை சட்ட திருத்ததிற்கு முன், நிதி அனைத்தும் பாலிசிதாரர்களுக்கு சொந்தமாக இருந்தது. ஆனால், எல்.ஐ.சி சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்கள் சொத்துரிமையை மீறும் வகையில் உள்ளது.  பாலிசிதாரர்களின் பணம் பங்குதாரர்களுக்கு மாற்றம் செய்யப்படுவதையும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். 

ஆகவே எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு  இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.மேலும், இந்த விவகாரம் நிதி மசோதாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்பதால் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும். அதன்பின்னரே விசாரிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின், எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்யும் வகையிலும், நிதிச் சட்டத்திலும், எல்.ஐ.சி சட்டத்திலும் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக, 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கும் எல்.ஐ.சி நிறுவனத்துக்கும்  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

மேலும், இந்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முகாந்திரம் இல்லை என தெரிவித்து, நிதி மசோதா தொடர்பான மனுவின் அம்சத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

எல்.ஐ.சி. பங்கு விற்பனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story