காசி கோயில் அருகேயுள்ள ஞானவாபி மசூதியில் வீடியோ பதிவுடன் ஆய்வு நடத்த அனுமதி - வாரணாசி கோர்ட்டு உத்தரவு


காசி கோயில் அருகேயுள்ள ஞானவாபி மசூதியில் வீடியோ பதிவுடன் ஆய்வு நடத்த அனுமதி - வாரணாசி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 May 2022 4:48 PM IST (Updated: 12 May 2022 4:48 PM IST)
t-max-icont-min-icon

ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது.

வாரணாசி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், வாரணாசி கோர்ட்டில் ஐந்து இந்து பெண்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ஞானவாபி மசூதி வளாகத்தில், மசூதிக்குப் பின்னால் உள்ள ஒரு இந்து ஆலயத்தில் தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிரார்த்தனைக்காக இந்த தளம் திறக்கப்படுகிறது. 

ஆனால், ஆண்டு முழுவதும் பிரார்த்தனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். மேலும், பழைய கோவில் வளாகத்தில் உள்ள மற்ற தெய்வ விக்கிரகங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத தெய்வங்களையும் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, அவர்களின் மனுக்களை விசாரித்து, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது. 

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று கணக்கெடுப்பு தொடங்கியது. ஆனால் மசூதிக்குள் வீடியோ எடுப்பதில் சர்ச்சை ஏற்பட்டதால் ஆய்வு முழுமையாக முடிக்கப்படவில்லை. மசூதிக்குள் வீடியோ எடுப்பதை அங்குள்ளவர்கள் எதிர்க்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது. ஞானவாபி மசூதிக்குள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வீடியோ எடுக்க கமிஷனர் அஜய் குமார் மிஸ்ரா முயற்சி செய்ததாக மசூதி குழு குற்றம் சாட்டியது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் கேட்கும் அனைத்து இடங்களிலும் வீடியோ பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளதாக மனுதாரர்களின் வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி கூறினார்.

மேலும், வாரணாசி கோர்ட்டு இரண்டு வழக்கறிஞர்களை புதிதாக சர்வே கமிஷனில் சேர்த்துள்ளது. மே 17ம் தேதிக்குள் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்வதையும் முடிக்க வேண்டும். இரு தரப்பு உறுப்பினர்களும் உள்ளே சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். இந்த செயல்முறையை தடுக்க முயற்சிக்கும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்  கமிஷனர் அஜய் குமார் மிஸ்ராவுடன் சேர்த்து கூடுதலாக இன்னும் இரண்டு சர்வே கமிஷனர்களை கோர்ட்டு நியமித்துள்ளது என்று  கூறினார்.

ஞானவாபி மசூதி நிர்வாகக் குழுவின் வழக்கறிஞர் அபய் நாத் யாதவ் கூறுகையில், கோர்ட்டு உத்தரவு சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார். 

Next Story