பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி; சோட்டா சகீல் கூட்டாளிகள் 2 பேர் கைது
பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்ததாக சோட்டா சகீல் கூட்டாளிகள் 2 பேரை என்.ஐ.ஏ. கைது செய்து உள்ளது.
மும்பை,
பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடந்த பிப்ரவரி மாதம் என்.ஐ.ஏ. வழக்கு ஒன்றை பதிவு செய்தது. சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் நாட்டில் பயங்கரவாதத்தை பரப்புவதாகவும், இருபிரிவினர் இடையே மோதலை தூண்டும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தாவூத் இப்ராகிம் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் என்.ஐ.ஏ. மும்பை, தானேயில் தாவூத் இப்ராகிம் தொடர்பான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் சோட்டா சகீல் கூட்டாளி சலீம் புரூட் உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதேபோல என்.ஐ.ஏ. சோதனையின் போது தாவூத் இப்ராகிம் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில் தாவூத் இப்ராகிம் மீதான வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. மும்பை கோரேகாவ் மேற்கு பகுதியில் இருந்து ஆரிப் அபுபக்கர் சேக் (வயது59), மீரா ரோட்டை சேர்ந்த சபீர் அபுபக்கர் சேக்கையும் (51) கைது செய்து உள்ளனர். இவர்கள் 2 பேரும் சோட்டா சகீலின் நெருங்கிய கூட்டாளிகள் ஆவர்.
சமீபத்தில் நடத்திய சோதனைக்கு பிறகு நடந்த விசாரணையில் 2 பேரும் மும்பை மேற்கு புறநகர் பகுதியில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தது மற்றும் தாவூத் இப்ராகிம் கும்பலில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட 2 பேரையும் அதிகாரிகள் மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு 2 பேரையும் வருகிற 20-ந் தேதி காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அனுமதி வழங்கியது.
Related Tags :
Next Story