பணக்கார வாலிபர்... ஆசையில் பல லட்சம் இழந்த 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள்
பணக்கார வாலிபர் என கூறி நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் திருமண ஆசை காட்டி ஒருவர் பல லட்சங்களை பறித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர் சைபர் குற்ற பிரிவு போலீசாரிடம் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், ஆன்லைன் வழியே திருமண வலைதளம் ஒன்றில் ஒரு நபருடன் தொடர்பு கிடைத்தது. இருவரும் திருமணம் செய்வது பற்றி பேசி கொண்டோம். தொடர்ந்து எஸ்.எம்.எஸ். மற்றும் தொலைபேசி அழைப்பு வழியே தொடர்பில் இருந்தோம்.
இந்நிலையில், தொழிலை பெருக்க வேண்டும் என கூறி ரூ.15 லட்சம் என்னிடம் வாங்கி மோசடி செய்து விட்டார் என அந்த இளம் பெண் மருத்துவர் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில், திருமண வலைதள அமைப்பு, வங்கிகள் மற்றும் பிற வலைதளங்களில் இருந்து தகவல்களை திரட்டினர். அதன் அடிப்படையில், திருமண வலைதளத்தில் பல பெயர்களில் பல முகவரிகளை உருவாக்கி நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் அந்நபர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
அந்த வலைதளத்தில், பொறியியல் பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ.வும் முடித்த, ஆண்டுக்கு ரூ.40 லட்சம் சம்பளம் வாங்குகிற பணக்கார வாலிபர் என தன்னை அடையாளப்படுத்தி கொண்டு, தனக்கு குடும்பம் எதுவும் இல்லை என தெரிவித்து வரன் தேடியுள்ளார்.
இதுதவிர, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதுபோன்று தன்னை காட்டி கொண்டு, பெண்களிடம் வீடியோ கால் செய்தும் உள்ளார். வி.ஐ.பி. எண் கொண்ட பி.எம்.டபிள்யூ. காரில் சென்று இளம்பெண்களை சந்தித்து வந்துள்ளார்.
இதன்பின்னர் மெல்ல அவர்களிடம், தொழிலை விரிவுபடுத்த வேண்டும். அவசர தேவையாக உள்ளது என கூறி பணம் கேட்டுள்ளார். இதுபோன்று பல பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.
சத்தீஷ்காரை சேர்ந்த 35 வயதுடைய அந்நபருக்கு 2015ல் திருமணம் நடந்து 3 வயதில் ஒரு மகள் உண்டு. ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் தற்போது வசித்து வருகிறார்.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 4 சிம் கார்டுகள், ஒரு பி.எம்.டபிள்யூ. கார், 9 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ஆடம்பர வாட்சு ஒன்று ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். 12ம் வகுப்பு வரையே படித்த அவர் வாடகை வீட்டில் வசித்து வருவதும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
ஆடம்பர மோகம், பணக்கார வாழ்க்கை ஆகியவற்றை நினைத்து பார்த்து, டாக்டர் போன்ற படித்த இளம்பெண்களும் இதுபோன்ற சம்பவங்களில் அடிக்கடி சிக்கி வருவது நாட்டில் அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story