2 முறை கொரோனா பாதிப்பு, பணி சுமை; உயிரிழந்த மருத்துவ மாணவி


2 முறை கொரோனா பாதிப்பு, பணி சுமை; உயிரிழந்த மருத்துவ மாணவி
x
தினத்தந்தி 14 May 2022 1:49 PM IST (Updated: 14 May 2022 1:49 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் 2 முறை கொரோனா பாதித்த மருத்துவ மாணவி ஹாஸ்டல் விடுதியில் உயிரிழந்து கிடந்துள்ளார்.





ஐதராபாத்,



தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்த மாணவி ஸ்வேதா.  கரீம்நகர் பகுதியை சேர்ந்த அவருக்கு கடந்த காலங்களில் 2 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், கல்லூரியில் உள்ள ஹாஸ்டல் விடுதியில் தங்கியிருந்த அவர் தூங்க சென்றுள்ளார்.  ஆனால், நேற்று காலை அவர் எழுந்திருக்கவில்லை.  அவருடன் தங்கியிருந்த சகமாணவி அந்த மாணவியை எழுப்ப முயன்றுள்ளார்.

ஆனால், சுயநினைவின்றி ஸ்வேதா கிடந்துள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

கல்லூரி முதல்வரான டாக்டர் பிரதிமராஜ் கூறும்போது, நள்ளிரவு 12 மணிவரை டாக்டர் ஸ்வேதா பணியில் இருந்துள்ளார்.  அதன்பின்னர் இரவில் தூங்க தனது அறைக்கு திரும்பியுள்ளார் என கூறியுள்ளார்.

அந்த மருத்துவ மாணவியுடன் படிக்கும் மற்ற மாணவிகள் மற்றும் டாக்டர்கள், 2 முறை கொரோனா தொற்றுக்கு பின்னர் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் அவர் உயிரிழந்து இருக்க கூடும் என சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story