திரிபுரா புதிய முதல்-மந்திரியாக மாணிக் சஹா இன்று பதவியேற்பு


திரிபுரா புதிய முதல்-மந்திரியாக மாணிக் சஹா இன்று பதவியேற்பு
x
தினத்தந்தி 15 May 2022 7:43 AM IST (Updated: 15 May 2022 7:43 AM IST)
t-max-icont-min-icon

திரிபுராவின் புதிய முதல்-மந்திரியாக மாணிக் சஹா இன்று காலை பதவியேற்கிறார்.








அகர்தலா,



வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது.  இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை வீழ்த்தி பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 25 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.  முதல்-மந்திரியாக பிப்லப் குமார் தேப் பதவி வகித்து வந்தார். அங்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், திரிபுரா மாநில முதல்-மந்திரியாக இருந்த பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  உள்கட்சி பூசல் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனினும், கட்சியை வலுப்படுத்த வேண்டிய பணி இருப்பதால் பதவி விலகினேன் என தேப் கூறினார்.   அவரது ராஜினாமாவை தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள், தங்களின் சட்டமன்ற குழு தலைவராக சஹாவை தேர்வு செய்தனர். புதிய முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சஹாவிற்கு முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்படி, திரிபுராவின் புதிய முதல்-மந்திரியாக மாணிக் சஹா அகர்தலா நகரில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11.30 மணியளவில் பதவியேற்கிறார்.  அவருடன் புதிய மந்திரிகளும் பதவியேற்று கொள்கின்றனர்.  பா.ஜ.க.வின் மாநில தலைவராக உள்ள சஹா நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாகவும் உள்ளார்.

பிப்லப் தேப் பதவி விலகியதும் சில மணிநேரங்களில், மாணிக் சஹா சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  பல் மருத்துவ துறையில் பேராசிரியரான 69 வயதுடைய சஹா திரிபுராவின் 11வது முதல்-மந்திரியாக பொறுப்பேற்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில், திரிணாமுல் காங்கிரசும் வெற்றி பெறுவதற்கான முனைப்பில் உள்ளது.  இதனால், பலமுனை போட்டியுடனேயே சட்டசபை தேர்தலை திரிபுரா சந்திக்க இருக்கிறது.  அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சியை வழிநடத்தி செல்லும் முக்கிய பொறுப்பு சஹாவுக்கு உள்ளது.

காங்கிரசில் இருந்து விலகி கடந்த 2016ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்த சஹா இதன்பின்னர் 2020ம் ஆண்டில் அக்கட்சி தலைவரானார்.  தொடர்ந்து அவர் நடப்பு ஆண்டின் மார்ச்சில் எம்.பி.யானார்.


Next Story