டெல்லியில் சி.என்.ஜி. விலை ஒரு கிலோவுக்கு ரூ.2 உயர்வு; வாகன ஓட்டிகள் கலக்கம்


டெல்லியில் சி.என்.ஜி. விலை ஒரு கிலோவுக்கு ரூ.2 உயர்வு; வாகன ஓட்டிகள் கலக்கம்
x
தினத்தந்தி 15 May 2022 9:07 AM IST (Updated: 15 May 2022 9:07 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வாகனங்களுக்கான எரிவாயு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு உள்ளது.




புதுடெல்லி,


டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு எடுத்து வருகிறது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில், சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதன்படி, தலைநகர் டெல்லியில் பொது போக்குவரத்தில் 1,500 தாழ்தள மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என கெஜ்ரிவால் அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அவற்றுக்கு மாற்றாக எரிவாயு நிரப்பப்பட்ட வாகனங்களின் பயன்பாடும் டெல்லியில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் வாகனங்களுக்கான எரிவாயு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு உள்ளது.

டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் இந்திரபிரஸ்தா எரிவாயு கழகம் (ஐ.ஜி.எல்.) அழுத்தப்பட்ட இயற்கை வாயு எனப்படும் சி.என்.ஜி. என்ற வாகன பயன்பாட்டிற்கான எரிவாயுவின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது.  இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி, சி.என்.ஜி. விலை டெல்லியில் ரூ.73.61, நொய்டாவில் ரூ.76.17, குருகிராமில் ரூ.81.94 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளையில், நாட்டின் பிற பகுதிகளிலும் சி.என்.ஜி. விலையை ஐ.ஜி.எல். உயர்த்தி அறிவித்து உள்ளது.  இதன்படி, சி.என்.ஜி. சில்லரை விலையில் கிலோ ஒன்றுக்கு ரேவாரியில் ரூ.81.94, கர்னால் மற்றும் கைத்தல் நகரங்களில் ரூ.82.27, கான்பூர், ஹமீர்பூர் மற்றும் பதேபூரில் ரூ.85.40, அஜ்மீர், பாலி மற்றும் ராஜ்சமந்தில் ரூ.83.88 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எரிவாயு விலை உயர்வை அடுத்து, டெல்லியில் ஐ.ஜி.எல். நிறுவனம் தொடர்ந்து சீரான விலை உயர்வை அறிவித்து வருகிறது.


Next Story