முத்தமிடுவதும், கொஞ்சுவதும் இயற்கைக்கு மாறான குற்றமல்ல- மும்பை ஐகோர்ட்டு கருத்து
முத்தமிடுவதும், கொஞ்சுவதும் இயற்கைக்கு மாறான குற்றமல்ல என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
மும்பை,
மும்பை புறநகர் பகுதியில் 14 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவனின் வீட்டு அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த பணம் மாயமானது. இதுகுறித்து சிறுவனின் தந்தை அவனிடம் விசாரித்தார். அப்போது சிறுவன் பணத்தை வீட்டருகே உள்ள கடைக்காரரிடம் கொடுத்ததாக கூறினான்.
சிறுவன் ஆன்லைன் விளையாட்டுக்கு ரீஜார்ஜ் செய்ய குறிப்பிட்ட கடைக்கு வாடிக்கையாக சென்று உள்ளான். இதில் ஒருநாள் கடைக்காரர் சிறுவனுக்கு முத்தம் கொடுத்து, அவனை தகாத இடங்களில் தொட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ மற்றும் இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடைக்காரரை கடந்த ஆண்டு கைது செய்தனர்.
இந்தநிலையில் கடைக்காரர் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை நீதிபதி அனுஜா பிரபுதேசாய் விசாரித்தார். விசாரணைக்கு பிறகு அவர், " இந்த வழக்கில் இயற்கைக்கு மாறான உறவு கொண்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. பாதிக்கப்பட்ட சிறுவனின் வாக்குமூலம் மற்றும் முதல் தகவல் அறிக்கையின்படி மனுதாரர் சிறுவனை தகாத இடங்களில் தொட்டு, உதட்டில் முத்தமிட்டு உள்ளார்.
முத்தமிடுவதும், கொஞ்சுவதும் இயற்கைக்கு மாறான குற்றம் அல்ல. மேலும் மனுதாரர் கைதாகி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. வழக்கு விசாரணையும் விரைவில் தொடங்குவதாக தெரியவில்லை. " என கூறி கடைக்காரருக்கு ரூ.30 ஆயிரம் சொந்த பிணையில் ஜாமீனில் விடுவித்தார்.
Related Tags :
Next Story