சில்வர்லைன் அதிவேக ரெயில் திட்டம்; எல்லைக் கற்களுக்கு பதிலாக ஜிபிஎஸ் பயன்படுத்த கேரள அரசு முடிவு!


சில்வர்லைன் அதிவேக ரெயில் திட்டம்; எல்லைக் கற்களுக்கு பதிலாக ஜிபிஎஸ் பயன்படுத்த கேரள அரசு முடிவு!
x
தினத்தந்தி 16 May 2022 8:59 PM IST (Updated: 16 May 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

சில்வர்லைன் திட்டத்திற்கான எல்லைகளை வரையறுக்க எல்லைக் கற்களுக்கு பதிலாக மாற்று முறைகளைப் பயன்படுத்துமாறு கேரள ரயில் மேம்பாட்டுக் கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள சில்வெர் ரெயில்  அதிவேக ரெயில் திட்டத்துக்கு, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பால் பலமுறை சர்வே கல் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது. ஆகவே, சில்வர்லைன் சீரமைப்புக்கு ஜிபிஎஸ் அடிப்படையிலான முறைகளைப் பயன்படுத்த கேரள ரயில் மேம்பாட்டுக் கழகத்திற்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கும் 530 கிலோமீட்டர் நீளமுள்ள சில்வர்லைன்  அதிவேக ரயில் பாதையில், காசர்கோட்டை அடைவதற்கு முன்பு கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், திரூர், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். இதன்மூலம், மாநிலத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு முழு பயணமும் சுமார் நான்கு மணி நேரம் மட்டுமே ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் ஜிபிஎஸ் நவீன முறையிலும், மற்ற பகுதிகளில் எல்லை கற்கள் கொண்டும் சீரமைப்பு பணிகள் நடைபெற வேண்டும் என்று கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், சில்வெர் ரெயில் திட்டத்தால் ஏற்படும் தாக்கத்தை உணர, சமூக தாக்க மதிப்பீடு (எஸ் ஐ ஏ) ஆய்வு நடத்துவதற்கு உதவியாக "புதிய முறையைப் பயன்படுத்தவும்" என்று வருவாய்த் துறையிலிருந்து கே-ரயிலுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

அதாவது, நல்ல மென்பொருள் அல்லது செயலிகளை பயன்படுத்தி புவி-குறியிடல்(ஜி பி எஸ்) முறையைப் பயன்படுத்தவும்  அல்லது அந்த பகுதிகளில் உள்ள நிரந்தரமான கட்டமைப்புகளில் குறிப்பதன் மூலம் எல்லைகளை வரையறுக்கலாம். வழக்கமான எல்லைக் கற்களை நடும் முறைக்கு மாறாக இந்த முறைகளை கையாண்டு  எல்லைகளை வரையறுக்கலாம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எஸ் ஐ ஏ ஆய்வு குழுவால், இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு, தரவுகளை முறையாக சேகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, லிடார் முறையில் சில்வர்லைனின் சீரமைப்புக்கான ஆய்வு இறுதி செய்யப்பட்டது என்று கே-ரயில் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. தொலைநிலை உணர்திறன்(ரிமோட் சென்சார்) தொழில்நுட்பமாகும், இது தொலைதூரத்தை அளவிட ஒளிக்கதிர் வடிவில் ஒளியைப் பயன்படுத்துகிறது. கே-ரயில் அரசுக்கு அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து தற்போது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதன்மூலம்,  எல்லைக் கற்களுக்கு பதிலாக ஜிபிஎஸ் பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது இப்போது உறுதியாகியுள்ளது.  

சில்வர்லைன் திட்டத்திற்கான எல்லைகளை வரையறுக்க எல்லைக் கற்களுக்கு பதிலாக மாற்று முறைகளைப் பயன்படுத்துமாறு கேரள ரயில் மேம்பாட்டுக் கழகத்திற்கு ( கே-ரயில் ) உத்தரவிடப்பட்டுள்ளது.நில அளவை முறை மட்டுமே மாறுபட்டுள்ளதே தவிர, திட்டம் கைவிடப்படவில்லை என்று ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் மறுமுனையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளும் இடதுசாரிகளின் அரசியல் தந்திரம் இது. இது மக்களுக்கு செய்யும் துரோகம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காது என்பதை உணர்ந்த மாநில அரசு கற்கள் பதிப்பதை நிறுத்த முடிவு செய்தது என்று பாஜக கூறியுள்ளது.


Next Story