வரலாற்று சாதனை; கொசு அடிக்கும் பேட் புகைப்படம்... சர்ச்சையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் டுவீட்
தாமஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய அணிக்கு தெரிவித்த வாழ்த்தில் கொசு அடிக்கும் பேட் புகைப்படம் ஒன்றை ஐ.ஏ.எஸ். அதிகாரி வெளியிட்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தன. இதில் ஆடவர் கால் இறுதியில் மலேசிய அணியை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பின் அரை இறுதிக்குள் இந்திய அணி நுழைந்தது. அரையிறுதியில், டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனால், இறுதி போட்டியை காண நாடு முழுவதும் ஆவல் ஏற்பட்டது. ஆடவர் இறுதி போட்டி ஒற்றையர் பிரிவில் லக்சயா சென் மற்றும் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.
இதனால், 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தாமஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. இதற்காக இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
எனினும், அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு பெருத்த சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. சோமேஷ் உபாத்யாய் என்ற அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது டுவிட்டரில், பேட்மிண்டனில் தங்களை விட இந்தியர்கள் எப்படி சிறந்து விளங்குகிறார்கள் என இந்தோனேசியர்கள் ஆச்சரியமடைந்து உள்ளனர் என தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
ஆனால் அந்த பேட், வீரர்கள் விளையாட வைத்திருக்கும் பேட்மிண்டன் பேட் அல்ல. வீடுகளில் கொசு உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கொல்ல பயன்பாட்டில் உள்ள பேட் ஆகும். இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்திய அணியின் வரலாற்று சாதனையை கொச்சைப்படுத்தும் வகையில் டுவீட் உள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது அவமதிப்பு என்றும் மலிவான செயல் என்றும் சிலர் தெரிவித்து உள்ளனர்.
நகைச்சுவை உணர்வு தேவையென்றாலும் சிலரது உழைப்பு மற்றும் வியர்வை இருக்கும்போது அதற்கு எதிரானது ஏற்று கொள்ள முடியாதது என்று சிலர் தெரிவித்து உள்ளனர்.
அரசு பணியில் உள்ள ஒருவர் நம்முடைய பேட்மிண்டன் வீரர்களின் கடின உழைப்பு புண்படும் வகையில் பதிவிடுவது முற்றிலும் வேதனையானது என்றும் நகைச்சுவையை ஓர் எல்லைக்குள்ளேயே ஏற்று கொள்ள முடியும் என்றும் ஒரு சிலர் தெரிவித்து உள்ளனர்.
Indonesian are surprised how Indians got better at badminton than them. pic.twitter.com/rW01DMXyjN
— Somesh Upadhyay, IAS (@Somesh_IAS) May 15, 2022
Related Tags :
Next Story