ஞானவாபி மசூதி: சிவலிங்கம் உள்ள இடத்தை பாதுகாக்க வேண்டும்; இஸ்லாமியர்கள் தொழுகையை தொடரலாம் - சுப்ரீம் கோர்ட்டு


ஞானவாபி மசூதி: சிவலிங்கம் உள்ள இடத்தை பாதுகாக்க வேண்டும்; இஸ்லாமியர்கள் தொழுகையை தொடரலாம் - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 17 May 2022 1:09 PM GMT (Updated: 17 May 2022 1:09 PM GMT)

ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கூடிய ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த நிலையில், மசூதி வளாகத்தில்  சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. 

நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு  ‘அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித்’ நிர்வாகக் குழுவின் மனுவை இன்று விசாரித்தது. இந்த நிர்வாகக் குழு தான், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் விவகாரங்களை நிர்வகிக்கிறது. 

இன்றைய விசாரணை முடிவில், ஞானவாபி மசூதில் முஸ்லிம்கள் எந்த தடையுமின்றி தொழுகை நடத்தலாம் என கோர்ட்டு உத்தரவிட்டது.

சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று வாரணாசி  மாவட்ட கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மசூதி பகுதிக்குள் நுழைய தடை விதித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  மேலும், ஞானவாபி மசூதி வளாகத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்தது.

அதேசமயம் அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த எந்த தடையும் இல்லை என்றும் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஒரு நேரத்தில் 20 பேருக்கு மட்டுமே தொழுகை செய்ய அனுமதி என்ற மாவட்ட கோர்ட்டின் உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் மனுதாரரான இந்து பெண்களுக்கு, கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி கோர்ட்டு விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஞானவாபி மசூதிக் குழுவின் மனு மீதான  விசாரணை அடுத்ததாக, வரும் 19ம் தேதி தொடரும் என்று ஒத்தி வைத்தனர். 


Next Story