பாடத்திட்டத்தில் இருந்து பகத்சிங் வரலாறு நீக்கமா? கர்நாடக பள்ளி கல்வித்துறை விளக்கம்


பாடத்திட்டத்தில் இருந்து பகத்சிங் வரலாறு நீக்கமா? கர்நாடக பள்ளி கல்வித்துறை விளக்கம்
x
தினத்தந்தி 18 May 2022 3:20 AM IST (Updated: 18 May 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பகத்சிங் வரலாறு நீக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கன்னட பாடப்புத்தகம்

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பாட புத்தகத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதாவது பகத்சிங்கின் வரலாறு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனரின் வரலாறு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக அறிவியல், கன்னட பாட புத்தகத்தில் இருந்த சில முக்கியமான விஷயங்களை ஆராய்ந்து திருத்தி அமைக்க ரோகித் சக்ரதீர்த்த என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 6 முதல் 10-ம் வகுப்பு வரை சமூக அறிவியல் மற்றும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை கன்னட பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

அச்சிடும் பணி

இதற்கிடையே சில ஊடகங்கள், 10-ம் வகுப்பு கன்னட மொழி பாட புத்தகத்தில் பகத்சிங் பாடத்தை நீக்கிவிட்டு ஹெடகேவாரின் வரலாறு சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் உண்மையில் 10-ம் வகுப்பு கன்னட பாடத்திட்டத்தில் பகத்சிங்கின் வரலாறு நீக்கப்படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். மாற்றி அமைக்கப்பட்டுள்ள 10-ம் வகுப்பு கன்னட மொழி பாடம் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story