22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு: மத்திய மந்திரிசபை முடிவு


22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு: மத்திய மந்திரிசபை முடிவு
x

22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை முடிவு செய்தது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் பதவிக்காலம், கடந்த 20-ந் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது, அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆணையத்தில் ஒரு முழுநேர தலைவரும், 4 முழுநேர உறுப்பினர்களும், 5 பகுதிநேர உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

பழமையான சட்டங்களை கண்டறிந்து நீக்க கோருவது உள்பட ஒப்படைக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சட்ட ஆணையம் கவனிக்கும்.

கயானா நாட்டுடன் விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கடந்த 2012-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கயானா நாட்டில் கணிசமான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள மொத்த மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர்.

எனவே, இந்த ஒப்பந்தம் இந்தியா-கயானா இடையே விமான சேவை தொடங்க வழிவகுக்கும். இரு நாடுகளும் உரிய நடைமுறைகளை முடித்த பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தொடர்பான சிகாகோ பிரகடனத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

அவற்றில் ஒரு திருத்தம், பயணிகள் விமானத்துக்கு எதிராக உறுப்பு நாடுகள் ஆயுதங்கள் பயன்படுத்துவதை தடுக்கிறது.


Next Story