26 மாணவிகளுக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு
தரிகெரேயில் அரசு உண்டு உறைவிட பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிக்கமகளூரு:-
26 மாணவிகள் பாதிப்பு
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெேரயில் அம்பேத்கர் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மாணவிகள் விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடுதியில் எலுமிச்சை சாதம் பரிமாறப்பட்டது. இந்த சாதத்தை மாணவிகள் சாப்பிட்டனர்.
இந்த நிலையில், எலுமிச்சை சாதத்தை சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு திடீரென்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விடுதி வார்டன் 26 மாணவிகளையும் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தரிகெேர ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. ஆறுதல்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட எலுமிச்சை சாதத்தையும் பாிசோதனை செய்தனர். அப்போது எலுமிச்சை சாதம் செய்த எண்ணெய் கெட்டு போய் இருந்தது தெரியவந்தது. இதனால் மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதும் தெரிந்தது.
இதுகுறித்து விடுதி வார்டன் மற்றும் சமையலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடைேய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை, எம்.எல்.ஏ. சுரேஷ் நேரில் சென்று பார்த்தார். பின்னர் மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார்.