கர்நாடக பாரத் காசி யாத்திரையின் 2-வது ரெயில் சேவை


கர்நாடக பாரத் காசி யாத்திரையின் 2-வது ரெயில் சேவை
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:15:51+05:30)

கர்நாடக பாரத் காசி யாத்திரையின் 2-வது ரெயில் சேவையை அறநிலையத்துறை மந்திரி தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:

கட்டணம் ரூ.15 ஆயிரம்

கர்நாடக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கர்நாடக பாரத் காசி யாத்திரை ரெயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்ட யாத்திரை ரெயிலை பிரதமர் மோடி கடந்த 11-ந் தேதி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். அதில் 546 பக்தர்கள் காசிக்கு சென்றனர். இந்த ரெயில் 8 நாட்கள் காசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய புண்ணிய தலங்களுக்கு செல்கிறது. பக்தர்கள் அங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் காசிக்கு செல்ல ஒருவருக்கு கட்டணமாக ரூ.15 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு மானியமாக ரூ.5 ஆயிரம் செலுத்துகிறது. இந்த நிலையில் 2-வது கர்நாடக காசி யாத்திரை ரெயில் சேவை தொடக்க விழா பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை மந்திரி சசிகலா ஜோலே கலந்து கொண்டு அந்த ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடும் குளிர் இருக்கும்

வட இந்தியாவில் வருகிற டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் குளிர் இருக்கும். வெப்பநிலை 5 டிகிரி செல்சியசுக்கு செல்லும். இந்த குளிரை தென்இந்திய மக்கள் தாங்குவது கடினம். அதனால் இந்த யாத்திரை ரெயில் சேவையை தொடங்குவதை ஒத்திவைக்குமாறு ரெயில்வே துறை கேட்டு கொண்டது. இதை ஏற்று 3-வது காசி யாத்திரை ரெயில் சேவை வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதிக்கு பிறகு தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு மானியம் வழங்க நிதி பற்றாக்குறை இல்லை.

இவ்வாறு சசிகலா ஜோலே கூறினார்.


Next Story