மருத்துவ மாணவர்கள் உள்பட மேலும் 3 பேர் கைது
மங்களூரு போதைப்பொருள் விற்பனை வழக்கில் மருத்துவ மாணவர்கள் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு:
போதைப் பொருள் வழக்கு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது நைஜீரியாவை சேர்ந்த நீல் கிஷோரி லால் ராம்ஜி ஷா (வயது 38) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா பயன்படுத்தி வந்ததுடன் விற்பனைக்கு உடந்தையாக இருந்த கேரளாவை சேர்ந்த டாக்டரான சமீர் (32), தமிழ்நாடு கடலூரை சேர்ந்த டாக்டர் மணிமாறன் முத்து (28), கேரளாவை சேர்ந்த நதியா சிராஜ் (24), ஆந்திராவை சேர்ந்த வர்ஷினி பிரதி (26), பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஐராபேசின் (27), சண்டிகரை சேர்ந்த ரியா சதா (22) உள்பட 10 பேரை கைது செய்தனர்.
தற்போது 10 பேரும் போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் நீல் கிஷோரி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதும், என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டில் 15 ஆண்டுகளாக பல் மருத்துவம் படித்து வந்ததும், இதில் தேர்ச்சி பெறாமல் இருந்து வந்ததும் தெரிந்தது.
பழ வியாபாரி
கஞ்சா பயன்பாட்டுக்கு அடிமையான இவர், தன்னுடன் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள், டாக்டர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு உடந்தையாக தெரலகட்டே, மணிப்பாலை சேர்ந்த மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். விசாரணையில் இவர்களுடன் கஞ்சா விற்பனையில் மேலும் 3 பேர் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் துமகூருவை சேர்ந்த மருத்துவ மாணவர் ஹர்ஷா குமார், கொச்சியை சேர்ந்த டி.பார்ம் மாணவர் அடோன் தேவ், மங்களூரு துறைமுகத்தில் பழ வியாபாரம் செய்து வந்த முகமது அப்சர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.