விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாலிபரை கத்தியால் குத்திய 3 பேர் கைது
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாலிபரை கத்தியால் குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உப்பள்ளி: தார்வார் மாவட்டம் கெலகேரி பகுதியில் வசித்து வருபவர் பிரஜ்வல் ஜாதவ்(வயது 22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அப்போது இவரது தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் இன்னொரு தரப்பினர் பிரஜ்வல் ஜாதவின் தலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பிரஜ்வல் ஜாதவ் உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுபற்றி உப்பள்ளி உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பிரஜ்வல் ஜாவதை கத்தியால் குத்தியது அதே பகுதியைச் சேர்ந்த விநாயக் தாலே(26), விட்டல் பாகி(24), மைலாரப்பா மாலகி(22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து விநாயக் தாலே உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.