சிறுத்தை தாக்கி சிறுவர்கள் உள்பட 3 பேர் பலத்த காயம்
மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது, சிறுத்தை தாக்கியதில் சிறுவர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
துமகூரு:-
மேய்ச்சலுக்கு...
துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா இரக்சந்திரா காலனியை சேர்ந்தவர்கள் ராஜு (வயது 45), சேத்தன் (15), தனுஷ் (13). இவர்கள் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ராஜு அமர்ந்து இருந்தார். அவர் கார் கதவை திறந்துவிட்டு கொண்டு காலை வெளியே நீட்டியவாரு அமர்ந்து இருந்தார். சிறுவர்கள் 2 பேரும் மேய்ச்சல் இடத்தில் அமர்ந்து இருந்தனர்.
அப்போது அந்த பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை திடீரென காரில் இருந்த ராஜுவின் காலை கடித்தது. பின்னர், அருகில் தரையில் அமர்ந்து இருந்த 2 சிறுவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. பின்னர், அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. சிறுத்தை தாக்கியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
சிறுத்தையை பிடிக்க தீவிரம்
அவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கடந்த வாரம் மைசூருவில் சிறுத்தை தாக்கியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார். முன்னதாக பெங்களூரு கெங்கேரி பகுதியில் ஊருக்குள் புகுந்த 4 சிறுத்தைகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களில் சிறுத்தை தாக்குதல் சம்பவம் தலைதூக்கி உள்ளது.