மானியம் பெற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி உள்பட 3 பேர் கைது; லோக் அயுக்தா போலீசார் நடவடிக்கை
மானியம் பெற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அம்பேத்கர் மேம்பாட்டு வாரிய பெண் அதிகாரி உள்பட 3 பேரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
குடகு:
ரூ.10 ஆயிரம் லஞ்சம்
குடகு மாவட்டம் மடிகேரியை சேர்ந்த பெண் ஒருவர், சுயதொழில் திட்டத்தின் கீழ் அம்பேத்கர் மேம்பாட்டு கழகத்தில் உதவி தொகை வாங்கி இருந்தார். மானிய அடிப்படையில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதல் தவணை தொகையை வாங்கி இருந்த அந்த பெண், 2-வது தவணை மானிய தொகையை பெற அம்பேத்கர் மேம்பாட்டு கழக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
அப்போது, அம்பேத்கர் மேம்பாட்டு கழக அதிகாரி சந்திரசேகர் என்பவர், அந்த பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் 2-வது தவணை மானிய தொகையை விடுவிப்பதாக தெரிவித்தார்.
3 பேர் கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த பெண், இதுபற்றி லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசாரின் அறிவுரையின்பேரில் அந்த பெண், அதிகாரி சந்திரசேகரை சந்தித்து லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொண்டார். அதன்படி நேற்று முன்தினம் அவர், மடிகேரியில் வைத்து அந்த பெண் அதிகாரி சந்திரசேகரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் அதிகாரி செலுவாம்பா, டிரவைர் திருமலா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.