உப்பள்ளி மெழுகுவர்த்தி தொழிற்சாலை தீ விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் கருகி சாவு


உப்பள்ளி மெழுகுவர்த்தி தொழிற்சாலை தீ விபத்தில்  பெண்கள் உள்பட 3 பேர் கருகி சாவு
x

உப்பள்ளி மெழுகுவர்த்தி தொழிற்சாலை விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உப்பள்ளி: உப்பள்ளி மெழுகுவர்த்தி தொழிற்சாலை விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தரிஹால் தொழிற்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெழுகுவர்த்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை தொழிற்சாலையில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. இதை ப்பார்த்த அக்கம் பக்கத்தினர், உள்ளே இருந்தவர்களுக்கு தகவல் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதில் துரதிர்ஷ்டவசமாக 8 பேர் சிக்கி கொண்டு உயிருக்காக போராடி கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து உப்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 8 பேரையும் போலீசார் மீட்டு உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

3 பேர் சாவு

ஆனாலும் நேற்று மாலை சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். பின்னர் நள்ளிரவு பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உப்பள்ளி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில் தீவிபத்தில் சிக்கி பலியானவர்கள், அதேப்பகுதியை சேர்ந்த கவுரம்மா, மால்தேஸ் மற்றும் விஜயலட்சுமி என்று தெரியவந்தது.

இந்த தீவிபத்து குறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் விபத்து தொடர்பாக தொழிற்சாலையின் மேலாளர் மஞ்சுநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். உரிமையாளர் அப்துல் காதர் ஷேக் தலைமறைவாகவுள்ளார். அவரை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனா்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இந்த நிலையில் தார்வார் மாவட்ட பொறுப்பு மந்திரி ஹாலப்பா ஆச்சார், தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்தார். மேலும் மந்திரி ஹாலப்பா ஆச்சார், தீவிபத்து நடந்த தொழிற்சாலையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story