டெல்லியில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு 30 அடி உயர சிலை!


டெல்லியில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு 30 அடி உயர சிலை!
x

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியா கேட் பகுதியில் அவரது சிலை நிறுவப்படும்.

புதுடெல்லி,

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட்டில் பழைய அமர் ஜவான் ஜோதிக்குப் பின்னால் உள்ள பெரிய விதானத்தின் கீழ் சிலை நிறுவப்படும்.

சுபாஷ் சந்திரபோசின் 30 அடி சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கவுள்ளார். கேதார்நாத்தில் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி சிலையையும் யோகிராஜ் செதுக்கியிருந்தார்.

முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்தியா கேட் பகுதியில் அவரது சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சிலை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிலையின் வடிவமைப்பை கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நவீன கலை அருங்காட்சியகம் (நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்) குழுவினர் செய்துள்ளனர்.

1930களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவரால், மற்ற பெரிய நினைவுச்சின்னங்களுடன் இந்தியா கேட் பகுதியில் விதானம் கட்டப்பட்டது. அங்கு பிரிட்டிஷ் முன்னாள் மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை பின்னர் 1960களின் மத்தியில், மத்திய டெல்லியில் உள்ள பூங்காவிற்கு மாற்றப்பட்டது. இப்போது அந்த விதானத்தில் தான் நேதாஜியின் சிலை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story