ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 30 லட்சம் பேர் பயன் பெற்றனர்


ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 30 லட்சம் பேர் பயன் பெற்றனர்
x

கர்நாடகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

சிக்கமகளூரு:-

ஜல் ஜீவன் திட்டம்

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை சிக்கமகளூரு மாவட்டத்திற்கு வந்தார். இதற்காக கடூர் போலீஸ் பயிற்சி மையத்தில் ஹெலிகாப்டர் தளம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடூர் சென்ற அவர் கடூர் போலீஸ் பயிற்சி மையத்தில் இறங்கினார். அங்கு நடந்த ஜனசங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்ட அவர்,

பின்னர் தரிகெரே தாலுகாவிற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்குள்ள விஞ்ஞானத்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அதே பகுதியில் நடந்த ஜல் ஜீவன் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:-

ஜல் ஜீவன் திட்டமானது மத்திய அரசின் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் 7 கோடி மக்களின் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

30 லட்சம் பேர் பயன்

கர்நாடகத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அதேபோல கங்கா திட்டத்தின் கீழ் தரிகெரே தாலுகாவில் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கங்கா குடிநீர் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 9 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர். தரிகெரே பத்ரா கால்வாய் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். என்.ஆர்.இ.ஜி. திட்டத்திற்கு சிக்கமகளூருவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.669 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் பல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காக கொண்டுவர இருக்கிறது. இந்த திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு திரும்பினார்

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா ஆனவட்டிக்கு சென்ற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, அங்கு நடந்த ஜன சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து சாலை மாக்கமாக அவர் பெங்களூருவுக்கு திரும்பினார்.


Next Story