மைசூரு தசரா விழா பாதுகாப்பு பணிக்கு 3,079 போலீசார் நியமனம் போலீஸ் கமிஷனர் தகவல்
மைசூரு தசரா விழா பாதுகாப்பு பணிக்கு 3,079 போலீசார் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
மைசூரு:
உலகபுகழ்பெற்ற மைசூரு தசரா விழா, வருகிற 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்தாண்டு தசரா விழாவை நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்கிறார். தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் மைசூரு தசரா விழா பாதுகாப்பு பணிக்காக 3,079 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி மைசூரு போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா தெரிவித்ததாவது:- மைசூரு தசரா விழா பாதுகாப்பு பணிக்காக 3,079 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 3 கட்டங்களாக பாதுகாப்பு பணிக்காக போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். அதன்படி வருகிற 24-ந்தேதி, 27-ந்தேதி, அக்டோபர் 3-ந்தேதி 3 கட்டங்களாக வருகிறார்கள். இதில் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தங்குவதற்கு மைசூருவில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், பள்ளி கட்டிடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.