இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வருகிற 30-ந் தேதி கடைசி நாள் கொரோனா பாதிப்பு குறைந்ததால் மக்கள் அலட்சியம்


இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வருகிற 30-ந் தேதி கடைசி நாள்  கொரோனா பாதிப்பு குறைந்ததால் மக்கள் அலட்சியம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பூஸ்டர் தடுப்பூசியை 91.85 லட்சம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர். இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகிற 30-ந் தேதியே கடைசி நாளாகும்.

பெங்களூரு:-

இலவச பூஸ்டர் தடுப்பூசி

நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் முதல் மற்றும் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெரும்பாலானோர் செலுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று கொரோனா பரவல் அதிகமானது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்கவும், கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்ளவும் பூஸ்டர் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் பணம் கொடுத்து தான் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக பூஸ்டர் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். இதையடுத்து, 75-வது சுதந்திர தின பவள விழா காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே பூஸ்டர் தடுப்பூசியையும் மக்கள் இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

வருகிற 30-ந் தேதி கடைசி நாள்

ஆனால் கர்நாடகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைவாகி விட்டதால், பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை

91 லட்சத்து 85 ஆயிரம் பேர் மட்டுமே செலுத்தி கொண்டுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியான 3 கோடியே 76 லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 லட்சத்து 89 ஆயிரத்து 916 பேர் கூட பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபோல், 18 வயதுக்கு மேற்பட்ட 59 வயதுக்கு உட்பட்டவர்களில் 46 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர். இன்னும் 3 கோடியே 35 லட்சத்து 23 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். மத்திய அரசு அறிவித்தப்படி கடந்த 2 மாதங்களாக இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருகிற 30-ந் தேதியுடன் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ள கடைசி நாள் ஆகும். எனவே அதற்கு முன்பாக பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story