ஓடிசாவில் இருந்த 32 கைப்பந்து வீரர்கள் விமானம் மூலம் பெங்களூரு வருகை


ஓடிசாவில் இருந்த 32 கைப்பந்து வீரர்கள் விமானம் மூலம் பெங்களூரு வருகை
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் விபத்து காரணமாக ஒடிசாவில் சிக்கிய கர்நாடகத்தை சேர்ந்த 32 கைப்பந்து வீரர்கள் விமானம் மூலம் பெங்களூரு திரும்பினர். வீரர், வீராங்கனைகளுக்கு அதிகாரிகள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

பெங்களூரு:-

கொல்கத்தாவில் 32 வீரர்கள்

கர்நாடகத்தை சேர்ந்த கைப்பந்து வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்பட 32 பேர் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் பங்கேற்க கடந்த 24-ந் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சென்றிருந்தனர். கடந்த 2-ந் தேதி இரவு அவர்கள் அனைவரும் கொல்கத்தாவில் இருந்து ரெயில் மூலமாக பெங்களூருவுக்கு திரும்ப இருந்தார்கள். அன்றைய தினம் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நடந்த ரெயில் விபத்து காரணமாக 32 பேரும் பெங்களூருவுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.

பின்னர் நேற்று முன்தினம் ஒடிசாவுக்கு சென்ற மந்திரி சந்தோஷ் லாட், அங்கு இருந்தபடியே கொல்கத்தாவில் இருக்கும் வீரர், வீராங்கனைகளை சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தார். அத்துடன் 32 பேரும் பெங்களூருவுக்கு விமானத்தில் வருவதற்கான ஏற்பாடுகளையும் மந்திரி சந்தோஷ் லாட் செய்து கொடுத்திருந்தார்.

பெங்களூருவுக்கு திரும்பினார்கள்

இதையடுத்து, நேற்று அதிகாலை 4 மணியளவில் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலமாக 23 பேர் முதற்கட்டமாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களை, அரசு அதிகாரிகள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். அதற்கு அடுத்தபடியாக 9 பேர் மற்றொரு விமானத்தில் பெங்களூருவுக்கு வருகை தந்தனர். இதன் மூலம் ரெயில் விபத்து காரணமாக ஒடிசாவில் சிக்கிய 32 கைப்பந்து வீரர், வீராங்கனைகளும் பத்திரமாக பெங்களூருவுக்கு திரும்பி உள்ளனர்.

இந்த கைப்பந்து வீரர்கள் அனைவரும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். ஒடிசா ரெயில்விபத்து காரணமாக கொல்கத்தாவில் சிக்கிய அவர்கள், தங்களை பெங்களூருவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கோரி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தனர். இதையடுத்து, முதல்-மந்திரி சித்தராமையாவின் உத்தரவின் பேரில் 32 பேரும் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு திரும்பி உள்ளனர். முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு வீரர், வீராங்கனைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story