தட்சிண கன்னடாவில் 34 சாதனையாளர்கள், 20 நிறுவனங்களுக்கு விருது- மந்திரி சுனில் குமார் வழங்கினார்


தட்சிண கன்னடாவில் 34 சாதனையாளர்கள்,   20 நிறுவனங்களுக்கு விருது-  மந்திரி சுனில் குமார் வழங்கினார்
x

தட்சிண கன்னடாவில் நடந்த கன்னட ராஜ்யோத்சவா விழாவில் 34 சாதனையாளர்கள் மற்றும் 20 நிறுவனங்களுக்கு ராஜ்யோத்சவா விருதை மந்திரி சுனில் குமார் வழங்கினார்.

மங்களூரு: தட்சிண கன்னடாவில் நடந்த கன்னட ராஜ்யோத்சவா விழாவில் 34 சாதனையாளர்கள் மற்றும் 20 நிறுவனங்களுக்கு ராஜ்யோத்சவா விருதை மந்திரி சுனில் குமார் வழங்கினார்.

கன்னட ராஜ்யோத்சவா விழா

தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் சார்பில் கன்னட ராஜ்யோத்சவா விழா மங்களூருவில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி சுனில் குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் அவர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாதனையாளர்களுக்கும், சமூக சேவகர்களுக்கு கன்னட ராஜ்யோத்சவா விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

"கர்நாடகாவை ஒன்றிணைக்க போராடிய அனைவரையும் நினைவுகூர்வது நமது கடமை. இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக பா.ஜனதா அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கன்னட பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க விவேகா பள்ளி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்

இத்திட்டத்தின் கீழ் ரூ.39.30 கோடியில் 275 வகுப்பறைகள் கட்ட ஒப்புதல் வழங்கப்படுகிறது. அமிர்தசாலை திட்டத்தின் கீழ் 27 அரசுப் பள்ளிகளின் விரிவான மேம்பாட்டுக்காக ரூ.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்ட பஞ்சாயத்து மூலம் 27 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

எல்லைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு ரூ.21 கோடி மானியம் வழங்கியுள்ளது. தேசிய கவி மஞ்சேஷ்வர் கோவிந்த் பாய் பற்றிய ஆராய்ச்சி புத்தகத்திற்கு ரூ.30 லட்சம் மானியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடைசி புத்தகம் 1995-ல் அச்சிடப்பட்டது. இப்போது இவரது ஆய்வுக்கட்டுரைகளுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே மறுபதிப்பு விரைவில் மேற்கொள்ளப்படும்.

ராஜ்யோத்சவா விருது

சஞ்சீவினி பிரசாரத்தின் கீழ் ஏழை மற்றும் நலிவடைந்த பெண்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கிராம பஞ்சாயத்து வரம்புகளின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் திரையரங்குகளுக்கு பெரும் தேவை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் 34 சாதனையாளர்கள் மற்றும் 20 நிறுவனங்கள் மாவட்ட அளவிலான ராஜ்யோத்சவா விருது வழங்கப்பட்டது.

விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வேதவியாஸ் காமத், உமாநாத் கோட்டியான், மாவட்ட கலெக்டர் குமாரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story