தொழில் அதிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
உடுப்பியில் நடந்த தொழில் அதிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மங்களூரு:-
தொழில் அதிபர் படுகொலை
உடுப்பி (மாவட்டம்) டவுனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத் ஷெட்டி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். தொழில் அதிபரான சரத் ஷெட்டியை முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் கொலை செய்திருந்தனர். இச்சம்பவம் குறித்து சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக சூரத்கல் அருகே உள்ள குலாயி பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஷெட்டி(வயது 20), லிகித் குலால்(21), ஆகாஷ் கர்கேரா(24), பிரசன்ன ஷெட்டி(40) ஆகிய 4 பேரை சூரத்கல் போலீசார் கைது செய்தனர்.
மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
அவர்களில் தினேஷ் மற்றும் லிகித் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆகாஷ் மற்றும் பிரசன்ன ஷெட்டியை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான 4 பேரையும் விரைவில் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யோகேஷ் ஆச்சார்யா, நாகராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.