மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: பெண்கள் உள்பட 4 பேர் சாவு
கொப்பல் அருகே மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி பெண்கள் உள்பட 4 பேர் பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
சுவரில் கார் மோதியது
கொப்பல் மாவட்டம் குகனூரு தாலுகா கொப்பல்-கதக் தேசிய நெடுஞ்சாலை அருகே பன்னிகொப்பா கிராமத்தில் ஒரு மேம்பாலம் உள்ளது. நேற்று அந்த மேம்பாலம் அருகே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. கார் மோதிய வேகத்தில் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
காரின் பல பாகங்கள் ஆங்காங்ககே சிதறி கிடந்தது. மேலும் காரின் முன்பக்க டயர்களும் உடைந்து கிடந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இதுபற்றி அறிந்ததும் குகனூரு போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
தெலுங்கானாவை சேர்ந்தவர்கள்
அப்போது பலியானவர்கள் பெயர் ஷண்முகா (வயது 28), வெண்ணிலா (25), ரூபாவதி (26) என்று தெரிந்தது. மற்றொரு நபரின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருந்தது. அவரது பெயர் தெரியவரவில்லை. இவர்கள் 4 பேரும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்திற்கு வந்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்ற போது கார் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
காரை டிரைவர் அதிவேகமாக ஓட்டியதால், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சுக்கு நூறாக நொறுங்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குகனூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.