வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை


வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
x

வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிவமொக்கா:-

வாலிபர் படுகொலை

சிவமொக்கா தாலுகா ஒலேபெனவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் நாயக் (வயது 35). இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலின்போது மகேஷ் நாயக்கிற்கும் அதேப்பகுதியை சேர்ந்த குமார் நாயக் (36), பிரியா நாயக் (38), சின்னா நாயக் (32), முசேனால் கிராமத்தை சேர்ந்த மதுக்குமார் (19) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி மகேஷ் நாயக், அங்குள்ள பாசன கால்வாய் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேரும், மகேஷ் நாயக்குடன் தகராறு செய்தனர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் மகேஷ் நாயக்கை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

4 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் நாயக், பிரியா நாயக், சின்னா நாயக், மதுக்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிவமொக்கா 2-வது கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் சிவமொக்கா புறநகர் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி பல்லவி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது முன்விரோதம் காரணமாக மகேஷ் நாயக்கை 4 பேரும் படுகொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், குமார் நாயக், சின்னாநாயக், பிரியா நாயக், மதுக்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.23,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.


Next Story