நின்ற லாரி மீது கார் மோதி 4 வாலிபர்கள் பலி
மண்டியா அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 4 வாலிபர்கள் பலியானார்கள்.
பெங்களூரு
பெங்களூருவை சேர்ந்தவர்கள்
பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த். இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சரத், நவீன் உள்பட 3 பேர் ஆவர். இவர்கள் அனைவரும் 23 முதல் 25 வயது உடையவர்கள். இவர்கள் 4 பேரும் பெங்களூருவில் இருந்து ஹேமந்துக்கு சொந்தமான காரில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு புறப்பட்டனர். காரை ஹேமந்த் ஓட்டினார். அவர்கள் மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா திருமலபுரா கேட் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சாலையோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அதை சரியாக கவனிக்காத ஹேமந்த் லாரியின் அருகில் சென்றவுடன், காரை அதிரடியாக திருப்ப முயன்றுள்ளார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
உயிரிழப்பு
இந்த விபத்தைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் காரை ஓட்டி வந்த ஹேமந்த் மற்றும் காரில் பயணித்து வந்த அவரது நண்பர்கள் சரத், நவீன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதையடுத்து அப்பகுதி மக்கள் இதுபற்றி நாகமங்களா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த நாகமங்களா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் பலியான ஹேமந்த் உள்பட 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.