அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை;
தொழிற்சாலை உரிமையாளர்களிடம்லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மங்களூரு:-
ரூ.3.49 லட்சம் பறிமுதல்
மங்களூரு நகர் கோட்டாரா பகுதியில் உள்ள துணை கோட்ட அலுவலகத்தில் தொழிற்சாலை பிரிவு உதயி இயக்குனராக பணியாற்றி வந்தவர் சுரேஷ். இவர் தற்போது மைசூருவில்
பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் மங்களூருவில் பணியாற்றியபோது, தொழிற்சாலை உரிமம் வழங்க, புதுபிக்க, தடையில்லா சான்றிதழ் வழங்க தொழிற்சாலை உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஊழல் தடுப்பு படையினர் அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.3.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணத்தை அவர் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது மங்களூரு போலீசில் வழக்குப்பதிவு யெ்யப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி நடந்தது.
4 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே அவர் பணி இடமாறுதல் ஆகி மைசூருவுக்கு சென்றுவிட்டார். இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி ஜகாதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அப்போது சுரேஷ் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.