கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் முதியவருக்கு 4 ஆண்டு சிறை; தட்சிண கன்னடா கோர்ட்டு தீர்ப்பு
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் முதியவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தட்சிண கன்னடா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே முல்கியில் கடந்த 2019-ம் ஆண்டு மர்மநபர் ஒருவர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முல்கி போலீசார் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட நபரை பிடித்து கைது செய்தனர். அவர் பண்ட்வால் தாலுகா இரா கிராமத்தை சேர்ந்த அப்பாஸ் (வயது 60) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.100 முகமதிப்புடைய 16 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தட்சிண கன்னடா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி ஜகாதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, அப்பாஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.