4.28 லட்சம் பேருக்கு கண் புரை நீக்கும் அறுவை சிகிச்சை


4.28 லட்சம் பேருக்கு கண் புரை நீக்கும் அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 28 Feb 2023 10:45 AM IST (Updated: 28 Feb 2023 10:47 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 4.28 லட்சம் பேருக்கு கண் புரை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு-

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 600 கண் புரை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இதுவரை 4 லட்சத்து 28 ஆயிரத்து 451 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவ கல்லூரிகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கண்பார்வை குறைபாடுகளை போக்கும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. வட கர்நாடகத்தில் பலருக்கு கண் பார்வைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் அதிகளவில் தாக்குகிறது. இதற்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய பார்வை குறைபாடு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வை தெரியாது.

நடமாடும் சுகாதார மையம் சார்பில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. பல்லாரி, சண்டூர், சிருகுப்பாவில் மாதந்தோறும் இரண்டு முறை கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. பல்லாரியில் இந்த முறை 22 பேருக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல்லாரி மாவட்டத்தை கண் பார்வை குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்ற நாங்கள் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.



Next Story