காட்டுத்தீயை தடுக்க 435 பார்வையாளர்கள் நியமனம்
பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க 435 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொள்ளேகால்:-
பந்திப்பூர் வனப்பகுதி
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி தமிழ்நாடு முதுமலை மற்றும் கேரள மாநிலம் வயநாடு வரையும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் வெப்பம் காரணமாக காட்டுத்தீ பிடிப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பிடித்து ஆயிரக்கணக்கான ஏக்கர் வனம் எரிந்து நாசமானது.
இதனால் இந்த ஆண்டு காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கோடைகாலம் நெருங்கி வருவதால், வனத்துறையினர் வனப்பகுதியில் தீ தடுப்பு பாதை அமைத்து வருகிறார்கள்.
435 பார்வையாளர்கள் நியமனம்
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதற்காக பந்திப்பூர் வனப்பகுதியில் 435 பார்வையாளர்களை நியமித்து உள்ளோம். மேலும் வனப்பகுதி முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். வனப்பகுதியில் காய்ந்த நிலையில் இருக்கும் புற்களை வெட்டி அகற்றிவிட்டு அங்கு தண்ணீர் தெளிக்கும் பணி நடந்து வருகிறது. பந்திப்பூர் வனப்பகுதி சாலையோரங்களில் உள்ள புற்களையும் வெட்டி தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முடியும்.