ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டில் ரூ.5 கோடி லஞ்சம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு செய்ததில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு செய்ததில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தனியாருக்கு தாரைவார்ப்பு
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கடன்பெற்று அடிப்படை வசதிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்டன. ஆனால் பா.ஜ.க. அரசு கடன் வாங்கி அந்த தொகைகளை வீணடித்துள்ளது. லாபத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். மாநில அந்தஸ்து பெறுவதற்காகத்தான் இந்த கூட்டணி என்றார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. முதல்-அமைச்சர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாற்காலியை காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறார்.
பொய்யே மூலதனம்
மத்திய அரசு புதுச்சேரிக்கு ரூ.10 ஆயிரம் கோடி தந்ததாக பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு தந்தது ரூ.250 கோடிதான். பா.ஜ.க.வின் மூலதனமே பொய்தான். மாற்றுக் கட்சியினரை விலைக்கு வாங்கி ஆட்சி செய்வதுதான் அவர்கள் வேலை.
இனிவரும் காலங்களில் அது பலிக்காது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. அரசுக்கு விரைவில் சமாதி கட்டப்படும். மத்திய அரசின் கல்விக்கொள்கையை நாங்கள் ஆட்சியில் இருந்தபோது கடுமையாக எதிர்த்தோம். இப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு புதுச்சேரியில் இல்லை. இந்த பாடத்திட்டத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. விசாரணை
மாணவ, மாணவிகள் தற்போது வருவாய்த்துறையின் சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க ஆன்லைனில் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்க டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. இதற்காக லஞ்சமாக ரூ.5 கோடி கைமாறியுள்ளது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அதேபோல் அங்கன்வாடியில் சத்துப்பொருட்கள் வழங்குவதற்கான உத்தரவும் டெண்டர் இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. .
மேகதாதுவுக்கு எதிர்ப்பு
மேகதாது அணை தொடர்பாக கோர்ட்டு உத்தரவு உள்ளது. காவிரிநீர் பிரச்சினை தொடர்பாக வழிகாட்டுதல் குழுவும் உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம், காரைக்காலுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு குறையும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
புதுவை காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அவருடன் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.