கட்டுப்பாடு என்ற பெயரில் 5 வாக்குறுதிகளை அமல்படுத்துவதில் மக்களை காக்க வைப்பது சரியல்ல; குமாரசாமி கருத்து


கட்டுப்பாடு என்ற பெயரில் 5 வாக்குறுதிகளை அமல்படுத்துவதில் மக்களை காக்க வைப்பது சரியல்ல; குமாரசாமி கருத்து
x

5 வாக்குறுதிகளை அமல்படுத்துவதில் கட்டுப்பாடு என்ற பெயரில் மக்களை காக்க வைப்பது சரியல்ல என்று குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

மக்களிடையே எதிர்பார்ப்பு

தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறியது. இதை மிக விரைவாக அமல்படுத்த வேண்டியது மாநில காங்கிரஸ் அரசின் பொறுப்பு. இந்த வாக்குறுதிகள் குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

அதே போல் அரசுக்கு எதிராக ஆக்ரோஷமும் அதிகரித்துள்ளது. மக்களின் கோபத்தை தணிக்காமல் காரணம் கூறுவது சரியல்ல. ஏனெனில் மக்களிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது காங்கிரஸ் தலைவர்கள் தான்.

அனைவருக்கும் இலவசம்

5 வாக்குறுதிகளை அமல்படுத்துவதில் கட்டுப்பாடு என்ற பெயரில் மக்களை காக்க வைப்பது சரியல்ல. மக்களிடம் ஆவேசமாக கூறிவிட்டு இப்போது அந்த திட்டங்களை செயல்படுத்த தயங்குவது சரியா?. எனக்கும் இலவசம், உங்களுக்கும் இலவசம், அனைவருக்கும் இலவசம் என்று கூறிய முதல்-மந்திரி சித்தராமையா தற்போது மவுனமாக இருப்பது ஏன்?. மந்திரிகள் கூறும் கருத்துக்களை மக்கள் நம்ப தயாராக இல்லை.

முதல்-மந்திரியே வாக்குறுதிகளை அமல்படுத்துவது குறித்து கூற வேண்டும். 1-ந் தேதி (நாளை) முதல் இந்த திட்டங்களை அமல்படுத்துவதாக சித்தராமையா அறிவிக்க வேண்டும். இதன் மூலம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நான் கூறுவதால் சில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எனக்கு எதிராக விமர்சனம் செய்கிறார்கள். காங்கிரசின் வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு மலை அளவுக்கு எதிர்பார்ப்புகள் உள்ளன.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.


Next Story