ரூ.44 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை
ரூ.44 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு கங்கமனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சென்றனர். அப்போது ஏ.டி.எம்.மில் நிரப்ப வைத்திருந்த ரூ.44 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கங்கமனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் கொள்ளையில் தொடர்புடைய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் உள்பட 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.44 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த கொள்ளை சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது ரூ.44 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதான 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.