இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணி இடைநீக்கம்
போலீஸ் ஜீப்பில் இருந்து குதித்து வாலிபர் உயிரிழந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளேகால்:-
வாலிபர் சாவு
சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா குந்தூர்மோல் கிராமத்தை சேர்ந்தவர் லிங்கராஜ் (வயது 21). அந்தப்பகுதியை சேர்ந்த சிறுமியை அவர் கடத்தியதாக எலந்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க, அவர் ஜீப்பில் இருந்து குதித்தார்.
இதில் பலத்த காயமடைந்த லிங்கராஜ், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த லிங்கராஜின் தாய் மகாதேவம்மா, தனது மகனை விசாரணை என்ற பெயரில் அடித்து சித்ரவதை செய்து போலீசார் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தார்.
5 பேர் பணி இடைநீக்கம்
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய எலந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் விசாரணை நடத்தி, போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது, எலந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவமதியா, சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவகவுடா, உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போலீஸ்காரர்கள் பத்ரம்மா, சோமசேகர் ஆகிய 5 பேரும் பணியில் அலட்சியமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.