மங்களூருவில் தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது கொடூர தாக்குதல்; 8 பேர் கைது


மங்களூருவில் தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது கொடூர தாக்குதல்; 8 பேர் கைது
x

மங்களூரு அருகே முன்விரோதத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது கொடூர தாக்குதல் நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மங்களூரு;

கல்லூரி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உல்லால் அருகே பல்மட்டா பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் மங்களூரு மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் ஆண்டுவிழா நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக கல்லூரி மாணவர்கள் ஆடிட்டோரியத்தில் வைத்து நடன நிகழ்ச்சிக்காக பயிற்சி எடுத்து வருகின்றனர். இதேபோல் நேற்றுமுன்தினம் மாலை ஆடிட்டோரியத்தில் வைத்து கேரளாவை சேர்ந்த மாணவரான சாபீப்(வயது 21), அவரது நண்பர்கள் 4 பேர் நடன பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த சீனியர் மாணவர்கள் 12 பேர், சாபீப் உள்பட 5 மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி விரட்டியுள்ளனர். மேலும் சிலமணிநேரம் கழித்து 5 மாணவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்குள் கிரிக்கெட் மட்டை உள்ளிட்டவற்றை எடுத்து சென்று கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த 5 மாணவர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8 பேர் கைது

இதுபற்றி அவர்கள் உல்லால் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மங்களூரு குருபுரா, அட்டூர், பாண்டேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அபாம் அஸ்லம், முகமது ஷேக், சினான் அப்துல்லா, சுனைப், இப்ராகிம் ராஜு, அப்ரீஷ், சையது அப்ரீத் மற்றும் முகமது அசாம் என்பது தெரியவந்தது. விசாரணையில் 8 பேர் உள்ளிட்டோர் முன்விரோதத்தில் மாணவர்களை தாக்கியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மற்ற மாணவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story