பெங்களூரு புறநகரில் 5 இடங்களில் அதிநவீன துணை நகரங்கள்


பெங்களூரு புறநகரில் 5 இடங்களில் அதிநவீன துணை நகரங்கள்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தலா 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பெங்களூரு புறநகரில் 5 இடங்களில் அதிநவீன துணை நகரங்கள் அமைக்கப்படுவதாக வீட்டு வசதித்துறை மந்திரி ஜமீர்அகமதுகான் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

சொகுசு வீடுகள்

கர்நாடக வீட்டு வசதித்துறை மந்திரி ஜமீர்அகமது கான் பெங்களூரு காவேரி பவனில் நேற்று தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கர்நாடக வீட்டு வசதி வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஜமீர்அகமது கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதனால் பெங்களூரு புறநகரில் தலா 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் அதிநவீன துணை நகரங்கள் அமைக்க வேண்டும். அங்கு உலக தரத்தில் வசதிகளை ஏற்படுத்தி குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை அதிகாரிகள் தயாரிக்க வேண்டும். அது மட்டுமின்றி 4 இடங்களில் அதிநவீன சொகுசு வீடுகள் கட்டப்படும்.

மெட்ரோ ரெயில் வசதி

இந்த திட்டங்களுக்கு தேவையான நிலங்களை அதிகாரிகள் அடையாளம் காண வேண்டும். இந்த துணை நகர திட்டத்தில் 30 ஆயிரம் வீட்டுமனைகள், 5 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். ஏழைகளுக்காக செயல்படுத்தப்படும் வீட்டு வசதி திட்டங்களில் லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். திட்ட பணிகளின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. மெட்ரோ ரெயில் வசதிகள் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு துணை நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த 5 துணை நகரங்களில் 1½ லட்சம் வீட்டு மனைகள் அமைக்கப்படும். அவற்றில் 25 ஆயிரம் வீடுகளும் கட்டப்படும். பெங்களூரு சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது. வெளிநாட்டினர் பலர் இங்கு நிரந்தரமாக குடியேறி வசிக்க விரும்புகிறார்கள். அவர்களை மனதில் வைத்து கர்நாடக வீட்டு வசதி வாரியம் சார்பில் சொகுசு வீடுகள் குடியிருப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இல்வாறு 1,000 சொகுசு வீடுகள் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு ஜமீர்அகமதுகான் கூறினார்.


Next Story