கர்நாடகத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி; வருகிற 11-ந்தேதிக்குள் செலுத்தினால் சலுகையை பெறலாம்


கர்நாடகத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி; வருகிற 11-ந்தேதிக்குள் செலுத்தினால் சலுகையை பெறலாம்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 11-ந்தேதிக்குள் செலுத்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

போக்குவரத்து விதிமீறல்கள்

'சிலிக்கான் பள்ளத்தாக்கு', 'பூங்கா நகரம்' என்றழைக்கப்படும் பெங்களூரு நகரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப நகரில் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. பெங்களூரு நகரில் உள்ள சாலைகளில் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன.

அதே நேரத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சம்பவங்களும் அதிகமாக நடந்து வருகிறது. அதாவது, சிக்னலில் நிற்காமல் செல்வது, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, தவறான பாதையில் செல்வது, வாகனம் நிறுத்த அனுமதி இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவது என பல்வேறு வழிகளில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வருகிறார்கள்.

ரூ.1,144 கோடி அபராதம் பாக்கி

இந்த போக்குவரத்து விதிகள் மீறலை தடுக்க பெங்களூரு நகரில் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

எனினும் போக்குவரத்து விதிகளை மீறலை கட்டுப்படுத்த முடியவில்லை.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை அடையாளம் கண்டு, அதன் உரிமையாளர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல் அனுப்பியும், வீடுகளுக்கு அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியும் வருகிறார்கள்.

அவ்வாறு நோட்டீஸ், குறுந்தகவல் அனுப்பியும் பலர் அபராதம் செலுத்தாமல் இருந்து வருகிறார்கள். பெங்களூரு நகரில் இதுவரை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2.34 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்மூலம் ரூ.1,144 கோடி ரூபாய் அபராதமும் வசூலாகாமல் நிலுவையில் உள்ளது.

தெலுங்கானாவில்...

இந்த நிலையில் நிலுவையில் உள்ள அபராத தொகையை வசூலிக்கவும், வழக்குகளை முடித்து வைக்கவும் போக்குவரத்து துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் நிலுவையில் உள்ள அபராதத்தை செலுத்த அம்மாநில அரசு சலுகை அறிவித்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல், கர்நாடகத்திலும் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை வசூலிக்க சலுகை அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து கமிஷனர் கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

50 சதவீதம் தள்ளுபடி

இந்த நிலையில் கர்நாடகத்தில் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை முடித்து வைக்க அரசு சலுகை அறிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு போக்குவரத்து துறை துணை செயலாளர் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக குறுந்தகவல் அல்லது நோட்டீஸ் பெறப்பட்டவர்கள் வருகிற 11-ந்தேதிக்குள் 50 சதவீத தள்ளுபடியுடன் அபராதத்தை செலுத்தலாம். உதாரணமாக ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதும்.

11-ந்தேதி வரை மட்டுமே...

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான விவரங்களை கர்நாடக ஒன் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். அருகில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் வாகன பதிவு எண்ணை வழங்கி 50 சதவீத தள்ளுபடியுடன் அபராதம் செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம்.

இந்த உத்தரவு வருகிற 11-ந்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்பதால் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஒரேநாளில் ரூ.5½ கோடி அபராதம் வசூல்

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் செலுத்த சலுகை அறிவித்ததால், ஏராளமான வாகன ஓட்டிகள் நேற்று தங்களுக்கான அபராதத்தை செலுத்தினர். அவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையம், கர்நாடக ஒன் மையத்தில் குவிந்து அபராதத்தை செலுத்தி சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து 50 சதவீத தள்ளுபடி அடிப்படையில் ரூ.5 கோடியே 61 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் 2 லட்சத்து ஆயிரத்து 828 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் இந்த முடிவுக்கு மக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


Next Story