'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள்; அலைமோதிய மக்கள் கூட்டம்
ராய்ச்சூரில் கடைகளில் வாங்கிய ‘சிப்ஸ்’ பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால், ‘சிப்ஸ்’ பாக்கெட்டுகளை வாங்க மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
'சிப்ஸ்' பாக்கெட்டுகளில்...
குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் உள்பட பலருக்கும் நொறுக்கு தீனி சாப்பிடுவது என்றால் அலாதி பிரியம் தான். பெற்றோருடன் வெளியே செல்லும் குழந்தைகள் செல்லும் வழியில் பார்க்கும் கடைகளில் பல வண்ண நிறங்களில் பாலிதீன் பாக்கெட்டுகளில் அடைத்து தொங்கவிடப்பட்டு இருக்கும் நொறுக்கு தீனி அடம்பிடித்து கேட்டு வாங்கி ருசித்து வருகிறார்கள்.
சிறுவர்கள் விரும்பும் நொறுக்கு தீனிகளில் 'சிப்ஸ்' பாக்கெட்டும் ஒன்று. இந்த நிலையில் குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர் கடை, கடையாக சென்று 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை முண்டி அடித்து கொண்டு வாங்கும் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
அதாவது ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா உன்னூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக 'சிப்ஸ்' பாக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் தின்பண்டங்களுடன் சேர்த்து 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தான் காரணம்.
30 ஆயிரம் ரூபாய்
சுமார் 5 நிறுவனங்களின் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் இதுபோன்று 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடைகளுக்கு சென்று அந்த 5 நிறுவனங்களின் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை வாங்க போட்டா போட்டி போட்டனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
கடந்த 4 நாட்களில் மட்டும் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை வாங்கியதில் சுமார் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாக அந்த கிராமத்தினர் கூறுகின்றனர்.
மேலும், கடைகளில் இருந்த அனைத்து 'சிப்ஸ்' பாக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இதையடுத்து மீண்டும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்த 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை மக்கள் முண்டியடித்து வாங்கினர். ஆனால் அவற்றில் எந்த பணமும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
அசலா?- போலியா?
மேலும், தங்களது நிறுவன சிப்ஸ்களை பிரபலப்படுத்த அந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ரூபாய் நோட்டுகளை பரிசாக வைத்திருக்கலாம் என்றும், 'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் அசலா? அல்லது போலியா? என்ற சந்தேகம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
இந்த 'சிப்ஸ்' பாக்கெட் விவகாரம் அப்பகுதி மக்கள் மத்தியில் ருசிகர விவாதமாகவும், பேசும் பொருளாகவும் மாறிவிட்டது என்றால் மிகையல்ல.